அரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம்

by Staff Writer 28-07-2021 | 9:09 PM
Colombo (News 1st) தமது கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி இன்று நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை அரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (28) போராட்டமொன்றை நடத்தியது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தாதியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மதியபோசன இடைவேளையின் போது, முல்லைத்தீவு மாவட்ட தாதியர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதனிடையே, யாழ். போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சை பிரிவுகள், கொரோனா விடுதிகளில் பணியாற்றும் தாதியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இவ்வாறு 100-க்கும் அதிகமான வைத்தியசாலைகளில் தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவையில் அனுமதி கிடைத்த தாதியர் சேவையின் கோரிக்கைகள் தொடர்பிலான சுற்றுநிரூபம் வௌியிடப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. களுபோவில போதனா வைத்தியசாலை, தங்காலை வைத்தியசாலை, மீரிகம வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலையிலும் தாதியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு மாத்தளை வைத்தியசாலையின் தாதியர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.