ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்

ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2021 | 6:03 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா , கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தலைவரும், விரிவுரையாளருமான டொக்டர் சமீர குணவர்தன, பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவத்துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசேட குழுவினரின் மேற்பார்வையின் கீழ், சிறுமி ஹிஷாலியின் சடலம் எதிர்வரும் 30 ஆம் திகதி தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

டயகம பகுதிக்கு பொறுப்பான நீதவானின் பூரண கண்காணிப்பின் கீழ் சடலம் தோண்டி எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இவர்களை தவிர தொடர்புடைய விசேட நிபுணர்கள் பலரும் நாளை மறுதினம் டயகம பகுதிக்கு செல்லவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சிறுமி உயிரிழந்த விதம், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா, அவ்வாறு ஏற்பட்டிருப்பின் எந்த காலப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மூவரடங்கிய விசேட நிபுணர் குழுவிடமிருந்து விசாரணை அறிக்கை பெறப்படவுள்ளது.

நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரை மற்றும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விசேட சட்ட மருத்துவ நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை 36 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்

இதனிடையே, ஹிஷாலினியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம தோட்ட பொது மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி எரிகாயங்களுடன் , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுத்துள்ளன. இதனால் ஆர்ப்பாட்டங்களும் வலுப்பெற்றுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்களூடாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமி ஹிஷாலினியை தொழிலுக்காக டயகம பகுதியிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்