அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்றும் இடம்பெற்றன

அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்றும் இடம்பெற்றன

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2021 | 9:28 pm

Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களை நினைவுகூரும் வகையில் இன்றும் நாட்டின் சில பகுதிகளில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அன்னாரின் மறைவு தொடர்பில் தமது கவலையை தெரிவித்துக்கொள்வதாகவும் பௌத்த தர்மத்திற்கு அமைய, அவரின் ஆத்மா மோட்சத்தை அடைய பிரார்த்தனை செய்வதாகவும் தேசிய அமைப்புகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் பெங்கமுவே நாலக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அன்னார் நாட்டின் ஊடகத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதை போன்று சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகளுக்கும் பங்களிப்பை செய்திருந்ததாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் மறைந்த தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக மலையக இந்து குருமார் அமைப்பின் ஏற்பாட்டில் பிரார்த்தனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

லிந்துலை – மட்டுகலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் 50-இற்கும் மேற்பட்ட குருமார்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

திரு.ஆர். ராஜமகேந்திரனின் மறைவு தொழில்வாண்மைத்துறையில் பெரும் இடைவௌியை தோற்றுவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மகாராஜா குழும அலைவரிசைகள் காரணமாகவே மக்களுக்கு தௌிவான தகவல்களைப் பெற முடிந்துள்ளதாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களுக்கு கல்முனை அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. இதன்போது, அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

கிண்ணியா – இடிமண் கிராம மக்கள் மறைந்த திரு.ஆர். ராஜமகேந்திரன் அவர்களை இன்று நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது, அமரர் திரு.ராஜமகேந்திரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சுத்தமான குடிநீர் இல்லாமல் இந்த கிராம மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். மக்கள் சக்தி சமூகப் பணி ஊடாக 2016 ஒக்டோபர் 25 ஆம் திகதி இடிமண் கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இதேவேளை, மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமும் கொழும்பில் நேற்று (27) நினைவேந்தல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் மறைவு தொடர்பில் அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் இரங்கல் வௌியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்