ஐ.நா உணவு முறைமைகள் மாநாட்டில் ஜனாதிபதி உரை

by Staff Writer 27-07-2021 | 12:35 PM
Colombo (News 1st) எதிர்கால சந்ததியினருக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்காக சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை, மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் நேற்று (26) ஆரம்பமாகிய ஐ.நா. உணவு முறைமைகள் மாநாட்டின் முன் அமர்வு நிகழ்வில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத் தொடருக்கான தளத்தை அமைக்கும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) தலைமையில் நடைபெறும் இந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். காணொளி தொழில்நுட்பத்தின் மாநாட்டில் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தற்போதைய கொவிட் 19 தொற்று நிலைமையானது, நாம் அனைவரும் ஒன்றோடொன்று ஆழமாக இணைந்திருக்கும் ஒரே உலகினைப் பகிர்ந்து கொள்கிறோம் என்ற விழிப்புணர்வைப் பெரிதும் வலியுறுத்தி நிற்பதாக குறிப்பிட்டுள்ளார். மனித குலமானது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அது உலகளாவிய சவால்களையே எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சவால்களை தனித்தனியாக எதிர்கொள்ள முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, இவற்றை வெற்றிகொள்ள வேண்டுமெனில் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் என உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.