பிரிந்து விட்ட பெரும் சொத்து: அமரர் ஆர். ராஜமகேந்திரனின் மறைவிற்கு பலரும் அனுதாபம்

பிரிந்து விட்ட பெரும் சொத்து: அமரர் ஆர். ராஜமகேந்திரனின் மறைவிற்கு பலரும் அனுதாபம்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2021 | 8:35 pm

Colombo (News 1st) நாட்டின் பெரும் சொத்து பிரிந்து சென்று விட்டதாக திரு. ஆர்.ராஜமகேந்திரனின் மறைவு தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த கால சூழல்களிலும் அதன் பின்னதான மீள்கட்டமைப்பு செயற்பாடுகளிலும் அவர் செலுத்திய அக்கறையினை மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சுனாமி, இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பேரிடர்கள் தேசத்தை உலுக்கிய போதெல்லாம் நாட்டையும் மக்களையும் கைகொடுத்து தூக்கி அரவணைத்த பெருமனிதர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அமரர் ஆர். ராஜமகேந்திரனின் மறைவு ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என முன்னாள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எந்த ஆட்சியாளராக இருந்தாலும், தவறுகள் இழைக்கப்படும் போது, அதனை சுட்டிக்காட்டும் துணிவு கொண்டவராக அமரர். ஆர் ராஜமகேந்திரன் திகழ்ந்ததாக முன்னாள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் முட்டைகளை இட்டு அமைதியாய் இருக்கும் ஆமையைப் போல், அமைதியாய் சாதித்தவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளது.

இன ஒற்றுமைக்கு நல்ல உதாரணமாகக் திகழ்ந்த அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் பாகுபாடற்ற சமூக சேவையென்பது அவரின் இரத்தத்தில் ஊறியது என அந்த அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நிகழ்வுகளை உலகறியச் செய்த ஊடகம் என்ற ரீதியிலும் மலையகத் தமிழர், கொழும்புவாழ் தமிழர், இலங்கை தமிழ் மக்கள் என அனைவர் சார்பிலும் அமரர். ஆர். ராஜமகேந்திரனின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதாக குறித்த அனுதாப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வத் தொண்டர்கள், அன்னார் நிரந்தர தலைவர் எனவும் வர்த்தகத்துறையின் முன்னோடி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

தாம் ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் தகவல் அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பிலும் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்திய விடயத்தில் ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் நாட்டிற்கு சேவையாற்றியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் இழப்பினால் தாம் மிகுந்த வேதனையடைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் ஒருபோதும் பிரபல்யத்தை எதிர்பார்க்கவில்லை எனவும், நாட்டிற்காக பல்வேறு துறைகளில் உயரிய சேவையை ஆற்றியுள்ளார் எனவும் கொழும்பு ஷிப்பர்ஸ் அக்கடமி தெரிவித்துள்ளது.

ஆர்.ராஜமகேந்திரன் அவர்களை, பிரகாசிக்கும் நட்சத்திரத்தை போன்று அனைவருக்கும் வழிகாட்டிய பூரணமான வர்த்தகராக அடையாளப்படுத்த முடியும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நீதியான, நடுநிலையான ஊடகக் கலாசாரத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியதன் முன்னோடியாக ராஜமகேந்திரன் அவர்கள் திகழ்வதாக, தாய்நாடு அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் கூறியுள்ளது.

ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் இலங்கை ஊடகத்துறையில், புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தமையை ஊடக தொழிற்சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர், துடிப்பான, வலிமையான, அற்புதமான ஒருவரென நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்