திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவுக்கு தொடர்ந்தும் இரங்கல் செய்திகள்

திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவுக்கு தொடர்ந்தும் இரங்கல் செய்திகள்

திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவுக்கு தொடர்ந்தும் இரங்கல் செய்திகள்

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2021 | 2:18 pm

Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவுக்கு இன்றும் (26) பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பௌத்த தர்மத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு முக்கிய பங்காற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தர்ம விஜய விகாரையின் முன்னேற்றத்திற்காக, மறைந்த திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் வழங்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அமெரிக்காவின் பிரதான சங்கநாயக்கர் வல்பொல பியனந்த நாயக்க தேரர், இரங்கல் செய்தியொன்றை விடுத்துள்ளார்.

இராஜேந்திரம் ராஜமகேந்திரன் அவர்களின் மறைவு இலங்கையின் வர்த்தக மற்றும் ஊடகத்துறையில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பிய ராஜமகேந்திரன் அவர்களின் மிகப்பெரிய வெற்றி சிரச ஊடக வலையமைப்பு எனவும் ஊடக சுதந்திரத்துக்காக முன்நின்றமையே அவரது வெற்றியின் இரகசியம் எனவும் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவு நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் பேரிழப்பாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

அரிய பண்புகள் பலவற்றை கொண்ட முன்மாதிரியான ஒருவராக ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் திகழ்ந்ததாக ருவன் விஜேவர்தன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி, அஸ்கிரிய சர்வதேச கிரிக்கெட் அரங்கை நிர்மாணிப்பதில் முன்னோடியாக திகழ்ந்த திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களுக்கு தமது பாடசாலையான கண்டி திரித்துவக்கல்லூரியின் கௌரவமும் உரித்தாவதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் கிரிக்கெட்டை நேசித்த சிறந்த கிரிக்கெட் ரசிகர் என முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவினால் தாமும் கவலையடைந்துள்ளதாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திரு. இராஜேந்திரம் ராஜமகேந்திரன் அவர்கள், தாம் உள்ளிட்ட வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் விளையாட்டுக்கும் ஆற்றிய சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதாகவும் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரும் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான சமிந்த வாஸ், ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் பண்புகளை நினைவுகூர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்