சிறுமி உயிரிழந்தமை குறித்து 30 பேரிடம் வாக்குமூலம்

ரிஷாட் பதியுதீன் வீட்டு பணிப்பெண் உயிரிழந்தமை தொடர்பில் 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 25-07-2021 | 2:53 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதனிடையே குறித்த சிறுமியை பணிக்காக அழைத்துவந்த தரகரின் வங்கிக் கணக்குகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அக்கரப்பத்தனையிலுள்ள வங்கியொன்றில் உள்ள குறித்த நபரின் வங்கிக் கணக்கிற்கு குறிப்பிட்ட தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். 16 வயதான சிறுமியை கொழும்புக்கு அழைத்துவந்து வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சரின் மனைவி, முன்னாள் அமைச்சரின் மனைவியின் தந்தை மற்றும் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியை அழைத்துவந்த முகவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஏற்கனவே முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் பணிக்கமர்ப்பத்தப்பட்டிருந்த 20 வயதான மற்றுமொரு யுவதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து 48 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சந்தேகநபர்கள் நால்வரும் நாளை (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். பொரளை பொலிஸார், கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவு, கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு ஆகியன தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.