டெல்டா பிறழ்வு குறித்து WHO விடுத்துள்ள எச்சரிக்கை

டெல்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

by Staff Writer 25-07-2021 | 3:51 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் எதிர்வரும் வாரங்களில் 200 மில்லியனுக்கும் மேற்பட்டோர் டெல்டா கொரோனா வைரஸ் பிறழ்வுடன் அடையாளம் காணப்படலாமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை (WHO) விடுத்துள்ளது. உலகளாவிய ரீதியில் இதுவரை 124 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் டெல்டா பிறழ்வு பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் காலத்தில் டெல்டா கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பிரதான வைரஸாக மாறுமெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, குறிப்பாக ஐரோப்பிய மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஸ்தாபனத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில மேற்கத்தேய நாடுகளில் கொவிட் மரணங்கள் குறைவடைந்துள்ளமையால், அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், தடுப்பூசி வேலைத்திட்டம் மந்தகதியாக முன்னெடுக்கப்படும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் செயற்பாடானது எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறக்கூடுமென உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.