வடமராட்சி கடற்பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கு அனுமதி

by Staff Writer 24-07-2021 | 6:33 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்திற்கொண்டு வடமாராட்சி கடற்பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை அமைச்சர் வழங்கியதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மக்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கூறியுள்ளார். வடமாராட்சி பிரதேச கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (23) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது. கடற்றொழில் திணைக்களத்தினால் வரையறுக்கப்படும் நிபந்தனைகளை பின்பற்றி வடமராட்சி கடலில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே தன்னுடைய தீர்மானங்கள் அமையும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை முற்றாக தடை செய்வதற்கு கடற்றொழிலாளர் சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.