இலங்கை அகதிகள் நலன்களை மேம்படுத்துமாறு உத்தரவு

இலங்கை அகதிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறு தமிழக முதல்வர் உத்தரவு

by Bella Dalima 24-07-2021 | 4:26 PM
Colombo (News 1st) தமிழகத்திலுள்ள முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான அடிப்படை வசதிகளையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் தலைமையில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு, புலம்பெயர் தமிழர்கள் நலன், உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று (23) நடைபெற்றது. "தலைநிமிரும் தமிழகம்" தொலைநோக்குத் திட்டங்களுக்கு அமைய, புலம்பெயர்வாழ் தமிழர்களின் நலன் பேணிடவும் அங்கு பாதிப்புகளுக்கு உள்ளானோர்க்கு உதவிடவும், நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கவும் புலம்பெயர் தமிழர்கள் நலத்துறை என்ற ஒரு புதிய துறையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். புலம்பெயர்வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது அவர் அறிவுறுத்தியுள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் புலம்பெயர்வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.