ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2021 | 2:05 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று முற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில், எரிகாயங்களுக்கு இலக்காகி சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சரின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

22 வயதான மற்றுமொரு பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.

16 வயதான சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்து வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரிஷாட் பதியுதீனின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மனைவியின் தந்தையும் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியை அழைத்து வந்த முகவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் சுமார் 20 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உறுதி செய்து கொண்ட தடயங்கள், சாட்சியங்களுக்கு அமையவும், பிரேத பிசோதனை அறிக்கைகளுக்கு அமையவும் 16 வயது சிறுமி வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இது குறித்த விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை பொலிஸார் நீதிமன்றத்தில் கோரவுள்ளனர்.

இந்த சிறுமிக்கு முன்னதாக அந்த வீட்டில் டயகம பகுதியை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவரும் 32 வயதான பெண் ஒருவரும் பணிப்பெண்களாக இருந்துள்ளனர்.

22 வயதான பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்ட போது, அவர் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

இதன்போது, தாம் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 22 வயதான குறித்த யுவதியை 2015 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்