இந்தியா செல்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்: சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்

இந்தியா செல்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்: சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

24 Jul, 2021 | 7:47 pm

Colombo (News 1st) இந்திய பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் Antony Blinken அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது பிரதமர் மோடியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்தனி Antony Blinken ஒன்றையும் நடத்தவுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமொன்றும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நீர்மூழ்கிக் கப்பல்களை தகர்க்கும் வல்லமையுடைய மூன்று போர் விமானங்களை இதுவரை அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.

இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த விமானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதுவர் கூறியுள்ளார்.

இதனிடையே, மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் தீவுகளை இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் A.B. சிங், ஹெலிகொப்டர் மூலம் நேற்று முன்தினம் கண்காணித்திருந்தார்.

இந்திய, பிரித்தானிய கூட்டு கடற்படை போர் பயிற்சிகள் இடம்பெற்ற நிலையில், அவர் இந்த கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்ற நிலையில், அவர் இந்த கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, வைஸ் அட்மிரல் A.B. சிங் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்துள்ளார்.

இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், பிராந்திய பூகோள அரசியலில் சீனாவின் அழுத்தம் குறித்தும் தற்போது அதிகம் பேசப்படுகிறது.

இந்த நிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முன்னறிவித்தல் இன்றி திபெத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

தென் மேற்கு திபேத் பகுதியில், இந்தியாவின் அருணாச்சலபிரதேச எல்லைக்கு அருகே உள்ள நியிங்கிச்சி நகருக்கு தனி விமானம் மூலம் சென்றடைந்த ஷி ஜின்பிங், அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்