அமித் ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

Pegasus விவகாரம்: அமித் ஷா பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல்

by Bella Dalima 23-07-2021 | 4:07 PM
Colombo (News 1st) Pegasus உளவு மென்பொருள் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் Pegasus உளவு மென்பொருள் மூலமாக இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்திய பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் Pegasus மூலமாக உளவு பார்க்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,
இஸ்ரேலின் உளவு மென்பொருள் மூலமாக குற்றவாளிகள் அல்லது பயங்கரவாதிகள் கண்காணிக்கப்பட வேண்டும். ஆனால் நமது நாட்டில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். இது குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்.
என வலியுறுத்தியுள்ளார்.