டெல்டா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

by Staff Writer 23-07-2021 | 8:25 PM
Colombo (News 1st) நாட்டில் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. COVID தொற்றுக்குள்ளான மேலும் 1,310 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,92,608 ஆக அதிகரித்துள்ளது. COVID தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 953 பேர் இன்று பூரண குணமடைந்துள்ளனர். இதுவரையில் 2,65,708 தொற்றாளர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று 43 COVID மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 568 ஆகப் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 30 வயதிற்கு குறைந்த 5 பேர் கடந்த 2 வாரங்களுக்குள் COVID தொற்று காரணமாக உயிரிழந்ததுடன், 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 139 பேர் குறித்த காலப்பகுதியில் COVID தொற்றால் உயிரிழந்துள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்ட 424 பேர் கடந்த இரண்டு வாரங்களில் COVID தொற்றினால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த நிலைமையை கருத்திற்கொள்ளும் போது, வயது முதிர்ந்தவர்கள் COVID தொற்றினால் உயிரிழக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.