டயகம சிறுமி உயிரிழப்பு: ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

by Staff Writer 23-07-2021 | 2:12 PM
Colombo (News 1st) வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் தந்தையும் சிறுமியை வேலைக்கு அமர்த்திய தரகரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். இதற்கமைய, கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழுவும் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சம்பவம் தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை மற்றும் வங்கிக் கணக்கறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அதற்கமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய, குறித்த சிறுமி கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இவ்வாறான செயற்பாடுகள் ஆட்களை விற்பனை செய்யும் குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த குற்றச்செயல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவியான 46 வயதான பெண்ணும், மனைவியின் தந்தையான 70 வயதான ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை டயகமயிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்காக அழைத்து வந்த தரகரான 64 வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவை பெற எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வீட்டு பணிப்பெண்களுக்கான குறைந்தபட்ச வயதெல்லையை 18 வரை அதிகரிப்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.