by Staff Writer 23-07-2021 | 8:07 PM
Colombo (News 1st) GUI LAN எனப்படுகின்ற சீன இலங்கை கூட்டு நிறுவனத்தின் யாழ். அரியாலை கடலட்டை இனப்பெருக்க நிலையம் நல்லூர் பிரதேச சபைக்கு பல வருடங்களாக வரி செலுத்தாமல் இயங்கி வருகிறது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் ஏற்கனவே முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
இந்த நிறுவனம் எவ்வித அனுமதியும் இன்றி பிரதேச மீனவர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், கிளிநொச்சி - கௌதாரிமுனை, கல்முனையில் அமைத்துள்ள கடலட்டை பண்ணை இன்றும் எவ்வித இடையூறுகளும் இன்றி தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது.
இதனிடையே, யாழ்ப்பாணம் - குருநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடலட்டை பண்ணை செயற்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இழுவை வலைப் படகுகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதனை மீறுகின்ற வகையிலும் கடற்றொழில் சங்க ஒழுங்கு விதிகளை மீறும் வகையிலும் சுமார் 39 இழுவை வலைப் படகுகள் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இழுவை வலைப் படகுகளை பயன்படுத்தி கடலட்டை தொழிலில் ஈடுபடுகின்றவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பிரதானி ஜெ. சுதாகரனுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.