Colombo (News 1st) நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை விளையாட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் உலகத் திருவிழாவான ஒலிம்பிக் விழா டோக்கியோவில் ஆரம்பமானது.
2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய இந்த ஒலிம்பிக் விழா COVID அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தாமதிக்கப்பட்டு இன்று ஆரம்பமாகியுள்ளது.
''Moving Forward" எனும் தொனிப்பொருளில் நடத்தப்படும் டோக்கியோ ஒலிம்பிக் விழாவின் அங்குரார்ப்பண வைபவம் சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவரான Thomas Bach-இன் தலைமையில் நடைபெறுகிறது.
COVID கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி கலைநிகழ்ச்சிகளும் கண்கவர் நிகழ்வுகளும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன.
207 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 11 ஆயிரத்திற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் இம்முறை ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கின்றனர்.
9 பேரை கொண்ட இலங்கை அணியின் தேசியக் கொடியை மில்கா கிஹானி ஏந்திச்சென்றார்.
டோக்கியோ நகரிலுள்ள ஒலிம்பிக் கிராமத்தின் பிரதான அரங்கில் ஜப்பானிய கலாசாரத்தை எடுத்தியம்பி, தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளித்து அங்குரார்ப்பண வைபவம் வண்ணமயமாகக் களைகட்டியது.
இது ஜப்பான் இரண்டாவது தடவையாக நடத்தும் ஒலிம்பிக் விழாவாகும்.
இலங்கையின் பட்மிண்டன் வீரரான நிலுக்க கருணாரத்ன, நீச்சல் வீர, வீராங்கனைகளான மெத்திவ் அபேசிங்க,
அனிகா கபூர், குறிபார்த்து சுடும் வீராங்கனை டெஹானி எகொடவெல, குதிரையேற்ற வீராங்கனை மெடில்டா கார்ல்சன், மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளான யுபுன் அபேகோன் மற்றும் நிமாலி லியனாராச்சி ஆகியோரும் இலங்கை ஒலிம்பிக் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.
2020 டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் 339 போட்டிப் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் புதுமுக வீர, வீராங்கனைகள் பலரும் இம்முறை களமிறங்கத் தயாராகவுள்ளனர்.
இந்த முறை ஒலிம்பிக் விழாவில் கராத்தே அறிமுகப்படுத்தப்படுவதுடன், 3x3 கூடைப்பந்தாட்டம், பேஸ்போல், BMX சைக்கிள் பந்தயம் ஆகிய போட்டிப் பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
