ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கத்தினர் 11 ஆவது நாளாக பகிஷ்கரிப்பு

by Staff Writer 23-07-2021 | 10:11 PM
Colombo (News 1st) ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கத்தினர் ஒன்லைன் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி இன்று 11 ஆவது நாளாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதனிடையே, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அழகியல் பாடத்திற்கான செயன்முறை பரீட்சை மேற்பார்வையிலிருந்தும் விலகுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அதிபர், ஆசிரியரின் தொழிற்சங்க போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மணிக்கூட்டு சந்தியினூடாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை அடைந்தனர். ஜோன் கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழக சட்டமூலத்தை உடனடியாக நிறுத்துவதுடன், கல்வியினை தனியார் மயப்படுத்துவதை நிறுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தினர்.