இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மன்னார் வளைகுடா கடற்பரப்பில் கண்காணிப்பு

இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மன்னார் வளைகுடா கடற்பரப்பில் கண்காணிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2021 | 6:58 pm

Colombo (News 1st) மன்னார் வளைகுடா கடற்பகுதி மற்றும் தீவுகளை இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி  வைஸ் அட்மிரல் ஜெனரல் அஜேந்திர பஹதுர் சிங் (Ajendra Bahadur Singh) ஹெலிகொப்டர் மூலம் கண்காணித்துள்ளார்.

மன்னார் வளைகுடா வழியாக தொடர்ந்து கடத்தல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு அருகே இலங்கை இருப்பதால், தெற்கு கடற்கரையான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து கடல் அட்டைகள், மஞ்சள், கடல் பல்லி, கடல் குதிரை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் இன்றி சந்தேகநபர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் பிரவேசிக்கின்றமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மன்னார் வளைகுடா பகுதியை கண்காணிக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்கள் பாதுகாப்பு பணிக்காக பாம்பன் குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (22) காலை இராமேஸ்வரம் சென்ற இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் அஜேந்திர பஹதுர் சிங் இராமேஸ்வரம் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, பாம்பன் அடுத்துள்ள குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கடற்படைக்கு சொந்தமான அதிநவீன ரோந்து கப்பல்களை பார்வையிட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மன்னார் வளைகுடா பகுதியிலும் தீவுகளிலும் தாழ்வாக பறந்து கடல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்