1,128 பேருக்கு இன்று கொரோனா தொற்று; தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

1,128 பேருக்கு இன்று கொரோனா தொற்று; தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2021 | 7:45 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,128 பேர் இன்று (22) அடையாளம் காணப்பட்டனர்.

அதன் பிரகாரம், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,90,705 ஆகும்.

2,64,755 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்று மேலும் 997 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், COVID தொற்றினால் உயிரிழந்தோர் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோரில் பெரும்பாலானோர், ஒரு தடுப்பூசியையேனும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தடுப்பூசியை பெற்றுக்கொள்வோரின் வருகையில் குறைவு அல்லது மந்தகதி ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆகவே, தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்வருமாறு சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி வேலைத்திட்டத்திற்கு தேவையான தடுப்பூசித் தொகை கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் கிடைக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, 15 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக COVID நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் வைத்திய நிபுணர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இந்நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த தடுப்பூசிகளில் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் தற்போது மத்திய தடுப்பூசி களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய தடுப்பூசிகள் வெலிசறையில் உள்ள தடுப்பூசி களஞ்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கிடைக்கும் தடுப்பூசிகளின் அதிகபட்ச பலனை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், டெல்டா பிறழ்வு அச்சுறுத்தல் வலுவடையக்கூடும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், வைத்திய நிபுணர் பி.ஜே.சி. பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, உலக சுகாதார ஸ்தாபனத்தின் வாராந்த மீளாய்வுக் கூட்டத்தில் டெல்டா பிறழ்வு பரவல் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உலகளாவிய ரீதியில் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எணணிக்கை 12 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளானவர்கள்.

வேகமாகப் பரவிவரும் டெல்டா பிறழ்வு அடுத்த மாதத்தில் உலகம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளது.

முதலாவதாக இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட அந்த வைரஸ் பிறழ்வு கடந்த வாரத்தில் மாத்திரம் 13 நாடுகளில் பரவியுள்ளதுடன், டெல்டா பிறழ்வு அடையாளம் காணப்பட்ட நாடுகள் மற்றும் வலயங்களின் எண்ணிக்கை 124 ஆகியுள்ளது.

அத்துடன், இதுவரை அவுஸ்திரேலியா, இந்தியா, பிரித்தானியா, பங்களாதேஷ், சீனா, டென்மார்க், இந்தோனேஷியா, ரஷ்யா, இஸ்ரேல், தென் ஆபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் 75 வீதமானோர், டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளானவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் மூன்று வாரங்கள் கடப்பதற்கு முன்னர் உலக கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 கோடியை எட்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மிக வேகமாகப் பரவி வரும் புதிய COVID பிறழ்வு, COVID கட்டுப்பாடுகளை தளர்த்தல், மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைதல் மற்றும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகமாக இருத்தல் என்பன அபாய நிலைக்கான காரணிகளாக அமைந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்