மட்டு. ஆணையாளருக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக முதல்வர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 22-07-2021 | 6:11 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு கோரி மாநகர முதல்வர் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி M.N.அப்துல்லா முன்னிலையில் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்றத்தின் உத்தரவினையும் மீறி ஆணையாளர் தொடர்ச்சியாக முதல்வரினால் வழங்கப்பட்ட அதிகாரத்தில் தலையீடு செய்வதாக மாநகர முதல்வரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை கருத்திற்கொண்ட நீதிபதி, நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மீறக்கூடாதென உத்தரவிட்டார். அத்துடன், நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாதென ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து, மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையினால் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீள பெறப்பட்ட போதிலும் அந்த அதிகாரங்களை அவர் தொடர்ச்சியாக பயன்படுத்துவதாக தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மட்டக்களப்பு மாநகர முதல்வரால், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.