சக்தியின் ஆடிவேல் சக்திவேல் விழா இன்று (22) ஆரம்பம்

by Staff Writer 22-07-2021 | 1:22 PM
Colombo (News 1st) சக்தியின் ஆடிவேல் சக்திவேல் விழா இன்று (22) ஆரம்பமானது. வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவத்தையொட்டி இம் முறையும் ஆடிவேல் சக்திவேல் விழாவை கெப்பிட்டல் மகாராஜா குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. கொழும்பு - ஜெயந்திநகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் வழிபாட்டுடன் ஆடிவேல் விழா இன்று காலை ஆரம்பமானது. ஆறுபடை வீடுகள் தோறும் பூஜிக்கப்பட்ட வேலாயுதப் பெருமானுக்கும் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சிவசுபர்மணிய சுவாமிக்கும் சம காலத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மஹா பூர்ணாகுதியை அடுத்து பிரதான கும்பங்களின் ஆலய உள்வீதி உலா இடம்பெற்று ஶ்ரீ சிவசுப்ரமணியருக்கும் வேலாயுதப் பெருமானுக்கும் ஸ்நபனாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்தும் அலங்கார தீபாராதனைகள் இடம்பெற்றன. நாட்டில் நிலவும் பெருந்தொற்று நிலைமை காரணமாக இம்முறை குறைந்தளவிலான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. ஜிந்துப்பிட்டி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட வேலாயுதப் பெருமான் கொழும்பு - 02 பிரேபுரூக் பிளேஸிலுள்ள கெபிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைமையகத்திலுள்ள நித்திய ஆலயத்திற்கும் எழுந்தருளினார். வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் உயரதிகாரிகாரிகள் உள்ளிட்ட பலரும் பூஜைகளில் கலந்துகொண்டிருந்தனர். பூஜைகள் நிறைவுபெற்றதும் கதிர்காமத் திருத்தலத்தை நோக்கி வேல் பெருமான் புறப்பட்டார். வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத் திருத்தலத்திற்கான யாத்திரையை போற்றும் வகையில் இந்த விழா நடத்தப்படுகின்றமைடயும் குறிப்பிடத்தக்கது. நாளை (23) கதிர்காமத் திருத்தலத்தில் நடைபெறவுள்ள சிறப்புப் பூஜை வழிபாடுகளுடன் இந்த வருடத்திற்கான ஆடிவேல் சக்திவேல் விழா இனிதே நிறைவுபெறவுள்ளது.