ஆசிரியர் சங்கங்கள் ஜனாதிபதி செயலகம் வரை பேரணி

by Staff Writer 22-07-2021 | 8:08 PM
Colombo (News 1st) அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரி ஆசிரியர் சங்கங்கள் இன்று ஜனாதிபதி செயலகம் வரை பேரணி முன்னெடுத்தன. இந்த பேரணியில் சுமார் 30 அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்திருந்தன. இன்று முற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கூடிய அதிபர் ஆசிரியர் சங்கங்களின்பிரதிநிதிகள் சுமார் அரை மணி நேரம் எதிர்ப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஜனாபதி செயலகம் நோக்கி பேரணியொன்றை முன்னெடுத்தனர். இந்த எதிர்ப்புப் பேரணி காரணமாக சுமார் 2 மணித்தியாலங்கள் ஜனாபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி மூடப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றவர்கள் மகஜர் ஒன்றை கையளிக்க வேண்டியுள்ளதாக அதிகாரிகளிடம் கூறினர். பின்னர் தொழிற்சங்க தலைவர்கள் மூவருக்கு அனுமதி கிடைத்ததுடன், அவர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஒருவரை சந்தித்தனர். அவன்ற் கார்ட் நிறுவனத் தலைவர் நிஷங்க சேனாதிபதி அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்திருந்தார். அதிபர், ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிஷங்க சேனாதிபதியால் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க முடியாமற்போனது. அடுத்த வாரம் அமைச்சரவையில் தாம் எதிர்பார்க்கும் விதமான தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படும் வரை ஒன்லைன் கற்பித்தலில் இருந்து தொடர்ந்தும் விலகியிருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.