ஹிஷாலினி மரணம்: ஆர்ப்பாட்டங்களும் விசாரணைகளும் தொடர்கின்றன

ஹிஷாலினி மரணம்: ஆர்ப்பாட்டங்களும் விசாரணைகளும் தொடர்கின்றன

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2021 | 8:22 pm

Colombo (News 1st) ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சியில் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம், கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.

நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவும் இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இதேவேளை, நீதிக்கான பெண்கள் அமைப்பு கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, தமது எதிர்ப்பை வௌிப்படுத்தியது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இருந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி எரிகாயங்களுடன் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பு தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளும் இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதாக அவர் கூறினார்.

டயகம பகுதியில் நேற்று சிறுமியின் தாய், சித்தப்பா, சகோதரன், சகோதரி ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அத்தோடு, சிறுமி பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்படுவதற்கு முன்னதாக டயகம பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் அந்த வீட்டில் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவர்களிடமும் பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

சிறுமியின் மரணம் தொடர்பிலான மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக, விசாரணைகளின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

விசேட பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக பொரளை பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்