ரிஷாட் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் வலுக்கின்றன

by Staff Writer 21-07-2021 | 8:48 PM
சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி நாட்டின் சில பகுதிகளில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி ஹட்டன் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பழனி திகாம்பரம், எம். உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, மலையக பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்கு அனுப்புவதை நிறுத்துமாறு பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்தார். சிறுமிக்கு நீதி கோரி டயகம ஈஸ்ட் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். சிறுமியின் உயிரிழப்புடன் தொடர்புபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் ஆப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி மட்டக்களப்பிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விசாரணைகள் தொடர்கின்றன... சிறுமி உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக மேலும் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதற்கமைய, கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழுவும், கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இந்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சிறுமி ஆரம்பத்தில் தங்கியிருந்து பாடசாலை சென்ற அவிசாவளை - புவக்பிட்டிய, கிரிவந்தல பகுதிக்கு குறித்த இரண்டு குழுவின் அதிகாரிகள் சென்று நான்கு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அத்துடன், இன்று டயகம பகுதிக்கும் சென்று அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்ததாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். சிறுமியின் தாயாரிடம் மற்றுமொரு வாக்குமூலமும் மேலும் சிலரது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார். ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இருந்த ஆண் பணியாளர் ஒருவரது கையடக்க தொலைபேசியை சில தினங்களுக்கு முன்னதாக அதிகாரிகள் கைப்பற்றியிருந்ததுடன், அவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டிருந்தது. கையடக்க தொலைபேசியில் ஏதேனும் தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அதனை பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் நேற்று (20) கையளித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வங்கிக்கணக்குகளை ஆராய்வதற்கு ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தங்கிருந்த காலப்பகுதியில் சிறுமி துன்புறுத்தல்களுக்கு இலக்கானாரா என்பது தொடர்பில் கண்டறிவதே விசாரணைகளின் முக்கிய நோக்கம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் விசாரணைகளின் போது ஆராயப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். சிவில் அமைப்புகள் முறைப்பாடு சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்துமாறு கோரி, சிவில் அமைப்புகள் சில குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளன. பௌத்த தகவல்கள் நிலையம், மக்கள் கடமைகள் நிலையம், எதிர்காலத்திற்கான நாம் இளைஞர் அமைப்பு, இலங்கை தாயின் மகள்மார் அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், எவ்வித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சிறுவர் பாதுகாப்பு மற்றும் அவர்களது கல்வி உரிமைகள் தொடர்பாக நாட்டிலுள்ள சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.