நீண்ட வார இறுதியில் பயணத்தடை விதிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை: இராணுவத் தளபதி

by Staff Writer 21-07-2021 | 8:35 PM
Colombo (News 1st) நீண்ட வார இறுதியில் பயணத்தடை விதிப்பது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என COVID-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக மீறப்பட்டால், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை உடனடியாக நிறுத்துவதற்கான நிலை ஏற்படக்கூடும் எனவும் இராணுவத் தளபதி கூறினார். இந்நிலையில், நாட்டில் இதுவரை 38 பேருக்கு டெல்டா பிறழ்வு தொற்றியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த பிறழ்வினால் பீடிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, பிலியந்தலை - மடபாத்த பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்று தற்போது மூடப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் பல இடங்களில் COVID தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பு மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை இந்த மாதத்திற்குள் நிறைவு செய்ய எண்ணியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதுவரை நாட்டிற்கு சுமார் 11 மில்லியன் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 20 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் நாளை (22) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இதற்கமைய, இலங்கைக்கு இதுவரை 91 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.