காணாமல் போன யுவதியை தேடும் பணிகளில் தாமதம்

டெவோன் நீர்வீழ்ச்சியில் நீரின் வேகம் அதிகரித்தமையால் யுவதியை தேடும் பணிகளில் தாமதம்

by Staff Writer 21-07-2021 | 1:18 PM
Colombo (News 1st) ஹட்டன் - பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் தாமதமாகியுள்ளன. டெவோன் நீர்வீழ்ச்சியில் நீரின் வேகம் அதிகரித்துள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்துடன், பிரதேச மக்களும் இணைந்து யுவதியை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். நீர்வீழ்ச்சியில் வழமையை விட நீர் அதிகரித்துள்ளதால், தேடுதல் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், மூன்றாவது நாளாக இன்றும் (21) தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர். நண்பர்கள் மூவருடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற சந்தர்ப்பத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த யுவதி வழுக்கி வீழ்ந்து காணாமல் போயுள்ளார். லிந்துலை, சென் தோமஸ் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். காணாமல் போன யுவதியுடன் சென்ற நண்பர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.