ஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்திகள்

by Staff Writer 21-07-2021 | 8:09 AM
Colombo (News 1st) ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இஸ்லாத்தின் இறுதி தூதராக கருதப்படும் முஹம்மது நபியவர்களின் வாழ்வியலை பின்பற்றும் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்பார்க்கும் ஈருலக வெற்றியையும் இறை நெருக்கத்தையும் அடைய ஹஜ் பண்டிகைக் காலம் உதவுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவல் காரணமாக, பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் பிரகாரம் செயற்படுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது அனைவரதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நோக்கமாக கொண்டதாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் இதனால் விசேட கவனம் செலுத்தி, இந்த பண்டிகைக் காலத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுமாறும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியூடாக கேட்டுக் கொண்டுள்ளார். சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு போன்றே இம்முறையும் வழமை போன்று மக்காவுக்கான யாத்திரை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்பது தனது நம்பிக்கையாகும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி மத வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் என்ற சுகாதார துறையினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப கொவிட் 19 தொற்றுநோயை முற்றாக ஒழித்திட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்லாமிய வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றி உலக மக்கள் அனைவரும் கொவிட் தொற்றிலிருந்து குறுகிய காலத்திற்குள் விடுபட வேண்டும் என இன்றைய இந்த மகத்தான நாளில் அல்லாஹ்வை பிரார்த்திப்போம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.