Pegasus மென்பொருளை பயன்படுத்தி தகவல் திருட்டு

இஸ்ரேலின் Pegasus உளவு மென்பொருளை பயன்படுத்தி தகவல் திருட்டு: விசாரணைகளை ஆரம்பித்தது பிரான்ஸ்

by Bella Dalima 21-07-2021 | 4:15 PM
Colombo (News 1st) இஸ்ரேலின் Pegasus உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பாா்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரான்ஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. Pegasus மென்பொருளை பயன்படுத்தி, பிரான்ஸின் அதிபர் இம்மானுவல் மெக்ரோன், செய்தியாளர்கள், மனித உரிமை ஆா்வலர்கள், எதிா்க்கட்சியினர் என பலரின் கைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Pegasus மென்பொருளை பயன்படுத்தி தனிநபர் இரகசியத் தகவல்களின் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதா, தகவல்கள் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டனவா, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டனவா என விசாரணைகள் இடம்பெறும் என பிரான்ஸின் நீதி அமுலாக்கத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் NSO நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள Pegasus உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரானவர்களின் கைபேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாக சா்வதேச ஊடகக் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த நாடுகளில் சா்ச்சையை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக `தி கார்டியன்’ நடத்திய விசாரணையில், சர்வாதிகார அரசுகள் இத்தகைய தகவல் திருட்டுக்கு பின்புலமாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. 2016 ஆம்ஆண்டிலிருந்து Pegasus spyware தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் போராட்டக் குழுவிற்கு தேவையான தகவல்களை இந்த உளவு மென்பொருள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இம்முறை இஸ்ரேலை சேர்ந்த சிறிய நிறுவனங்களின் மென்பொருள் மூலம் தகவல் திருட்டு உலகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன், லே மோன்ட் ஆகிய ஊடக நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. ஏறக்குறைய 50,000 பேரின் ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. மெக்சிகோவில் மட்டும் 15,000 ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினர், பத்திரிகையாளர்கள், அரசு விமர்சகர்கள் ஆகியோரது செல்போன்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த இணையத்தள செய்தி நிறுவனமான `தி வயர்’, 40 பத்திரிகையாளர்கள், 2 மத்திய அமைச்சர்கள் உட்பட 300 பேரின் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், மனித உரிமை போராளிகள் ஆகியோரது ஸ்மார்ட்போன் எண்களும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்னணி பத்திரிகைகளான தி ஹிந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர்களின் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தி வயர் தனது புலனாய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. தகவல் திருடப்பட்டதாக இடம்பெற்ற பட்டியலில் AFP, வால் ஸ்ட்ரீட், CNN, நியூயார்க் டைம்ஸ், அல் ஜஸீரா, பிரான்ஸ் 24, ரேடியோ பிரீ யூரோப், மீடியாபார்ட், எல் பாரிஸ், அசோசியேடட் பிரஸ், லே மோன்ட், ப்ளூம்பெர்க், எக்கனாமிஸ்ட், ரொய்ட்டர்ஸ், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, கார்டியன் ஆகியவற்றின் பத்திரிகையாளர்களின் எண்களும் அடங்கும் என தெரியவந்துள்ளது. Pegasus உளவு மென்பொருளானது ஸ்மார்ட்போன் கெமரா மற்றும் மைக்ரோபோனை மட்டுமே குறிவைத்து தகவல்களைத் திருடும்.