உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2021 | 8:59 pm

Colombo (News 1st) எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று (20) தோற்கடிக்கப்பட்டது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்ததுடன், சிலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரேரணைக்கு ஆதரவாக தமது வாக்கினை பதிவு செய்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு எடுத்திருந்த உத்தியோகபூர்வ தீர்மானத்திற்கு அமையவே தலைவர் ஆதரவாக வாக்களித்ததாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

எனினும், ஏனைய 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று பாராளுமன்றத்தில் பிரசன்னமாகாமல் இருந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளவில்லை.

எனினும், அவரது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

கட்சியின் தலைவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக உத்தியோகபூர்வமாக இந்த பிரேரணை குறித்து ஆராயப்படவில்லை என்ற போதிலும், குறித்து உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியிலேயே பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவர் சட்டத்தரணி என்.எம். சஹீட் தெரிவித்தார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரட்டை பிரஜாவுரிமை சரத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முஷாரப் முதுநபீனும் நேற்றைய வாக்களிப்பின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அரசுடனேயே பேசித்தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தாம் இந்த தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் கூறினார்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் எந்தவித விடயமும் பேசப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்