இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியா வசமானது

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியா வசமானது

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியா வசமானது

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2021 | 8:29 am

Colombo (News 1st) இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி, கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

276 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் நேற்று ஓர் ஓட்டதுடன் ஆட்டமிழந்தார்.

அணித் தலைவர் ஷிகர் தவானும் 29 ஓட்டங்களுடன் Lbw முறையில் ஆட்டமிழந்தார்.

மனீஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன் மனீஷ் பாண்டே 37 ஓட்டங்களும் வௌியேறினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா ஓட்டமேதுமின்றி பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இந்திய அணி 193 ஓட்டங்களில் 7 விக்கெட்களை இழந்தது.

8 ஆவது விக்கெட்க்காக ஜோடி சேர்ந்த தீபக் ச்சஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது.

பந்துவீச்சாளரான தீபக் சஹார் 66 பந்துகளில் அரைச்சதம் அடித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அணி சார்பில் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அவர் பெற்றுக்கொடுத்தார்.

பரப்பரப்பான ஆட்டத்தில், இறுதி ஓவரில் இந்திய அணி வெற்றியை எட்டியது.

49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களை பெற்று 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோ 50 ஒட்டங்களை பெற்றுக் கொண்டார்.

சரித் அசலங்க 65 ஓட்டங்களுடன் வௌியேறினார்.

புவனேஷ்குமார் மற்றும் யுவேந்திர ச்சஹல் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

இரு அணிகளுக்கும் இடையேயான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்