ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு 

by Staff Writer 20-07-2021 | 8:28 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதேவேளை, உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி இன்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. நுவரெலியா - டயகம மூன்றாம் பிரிவு தோட்டத்திலிருந்து டயகம நகர் வரை பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறுவர்களை பணிக்கு அமர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இஷாலினியின் இறப்பிற்கு நீதி கோரியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. கொழும்புவாழ் மலையக சமூகமும் கொழும்பு - புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியது. இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்பாகவும் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டனர். சிறுமியின் தந்தை ஜெயராஜ் ஜூட்குமார் பின்வருமாறு தெரிவித்தார்,
அங்கு செல்லுமாறு நாம் பலவந்தப்படுத்தவில்லை. அவர் விரும்பியே சென்றார். ஆண்களைப் பார்த்தால் விலகிச்செல்லும் பெண் பிள்ளை அவர். என்ன நடந்தது என எமக்கு தெரியாது. அவர் நெருப்பிற்கு பயப்படுபவர். இது யாரேனும் செய்துள்ளனர். அவர் தீ மூட்டிக்கொள்ளவில்லை என நான் நூறு வீதம் நம்புகின்றேன். தீ மூட்டியுள்ளனர். கொரோனாவினால் எனக்கு தொழில் இல்லை. தொழில் புரிவதற்கு இடமில்லை. எனக்கு காலில் உபாதை என்பதால் கஷ்டப்பட்டு வேலை செய்ய முடியாதுள்ளது
உயிரிழந்த சிறுமியின் தாய் ராஜமாணிக்கம் ரஞ்சனி தெரிவித்ததாவது,
சாப்பிடுவதற்கு எதுவும் இன்றி நாம் துன்பப்பட்டோம். தன்னால் அங்கு வேலை செய்ய முடியாது என்றும் அழைத்துச்செல்லுமாறும் அவர் கூறினார். அங்கு தொழில் செய்பவர் தும்புத்தடியால் தன்னை தாக்குவதாகக் கூறினார். சிறிய பிள்ளை, அவரைத் தாக்க வேண்டாம் என கூறுங்கள் என நான் Madam-இடம் கூறினேன். மேலதிகமாக நான் பணம் பெற்றுள்ளதால், நான் தொழிலுக்கு வருகிறேன் என தெரிவித்தேன். 21 ஆம் திகதி முடக்கல் நீக்கப்பட்டால் காலை அங்கு இருப்பேன் என கூறினேன். அவரே ஏதேனும் செய்திருப்பார் என கூறுவதாக இருந்தால், அந்த வீட்டில் ஏதேனும் நடந்திருக்க வேண்டும். இவ்வாறு இன்னுமொரு பிள்ளைக்கு நடக்கக்கூடாது. ஏழ்மை காரணமாகவே என்னைப் போன்ற தாய்மார் இவ்வாறான தவறை இழைக்கின்றனர். குற்றமிழைத்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என நான் வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்
இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவிடம் இன்று வினவப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அச்சிறுமி நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த நவம்பரில் தான் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார். நவம்பர் மாதத்திலிருந்து இம்மாதம் 3 ஆம் திகதி வரை குறித்த வீட்டில் இருந்தவர்கள் யார், சிறுமிக்கு என்ன நடந்தது என்பன தொடர்பிலான சாட்சியங்கள் தேடப்பட்டு வருவதாகவும் நேற்று (19) இரண்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.