உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி 

by Bella Dalima 20-07-2021 | 5:57 PM
Colombo (News 1st) எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு  பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 61 பேரும் எதிராக 152 பேரும் வாக்களித்தனர். இதற்கமைய, நம்பிக்கையில்லா பிரேரணை 91  ​மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (19) ஆரம்பமானதுடன், இன்றும் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரட்டை பிரஜாவுரிமை சரத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முஷாரப் முதுநபீனும் இன்றைய வாக்களிப்பின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.