அர்ஜூன மகேந்திரன் இல்லாமல் வழக்கை விசாரிக்க அனுமதி

அர்ஜூன மகேந்திரன் இல்லாமல் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய வழக்கை விசாரிக்க அனுமதி

by Staff Writer 20-07-2021 | 7:47 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அஜான் புஞ்சிஹேவா ஆகியோர் இல்லாமல் 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில், ஒரு வழக்கை நடத்திச் செல்வதற்கு கொழும்பு விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் சட்டமா அதிபருக்கு இன்று அனுமதி வழங்கியது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது அரசாங்கத்திற்கு சொந்தமான 36.98 பில்லியன் ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமித் தொடவத்த, அர்ஜூன திலகரத்ன மற்றும் மொஹமட் இஸ்ஸதீன் ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரண்டு பிரதிவாதிகள் இலங்கையில் இருந்து வௌியேறியுள்ளதுடன், இதுவரை நாட்டிற்கு திரும்பவில்லை என்பதனை உறுதிப்படுத்துவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரியொருவர் ஊடாக சாட்சிகள் கோரப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன. அதன்படி, குறித்த பிரதிவாதிகள் இல்லாமல் வழக்கை நடத்திச்செல்வதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள் குழாம், வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தது.

ஏனைய செய்திகள்