பசிலின் ஜீ.ஐ.குழாய் வழக்கு: சட்டத்தரணிகள் கோரிக்கை

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான ஜீ.ஐ. குழாய் வழக்கை தொடர்ந்தும் நடத்துவது குறித்து ஆராயுமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை

by Staff Writer 19-07-2021 | 1:49 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் 2016 ஆம் ஆண்டில் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஜீ.ஐ குழாய் (GI pipe) வழக்கை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பில் ஆராயுமாறு அவரது சட்டத்தரணிகள், சட்டமா அதிபரிடம் ​கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் தயாராகவுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்லா இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களினால் கோரிக்கை விடுக்கப்படாத போதிலும், திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான 365 இலட்சம் ரூபா செலவில் ஜீ.ஐ. குழாய்களை கொள்வனவு செய்து அவற்றை உள்ளூராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அமில கித்சிறி ரணவக்கவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (19) கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.