பன்னிப்பிட்டிய வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த 13 மில்லியன் ரூபா பணம் மீட்பு

by Staff Writer 18-07-2021 | 3:33 PM
Colombo (News 1st) பன்னிப்பிட்டிய - ஹிரிபிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (17) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பணத்தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபரான 'ரன் மல்லி' என அழைக்கப்படும் சரித் சந்தகெலும் என்பவரது மனைவியின் சகோதரர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டிலிருந்தே குறித்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இந்த சுற்றிவளைப்பின் போது ரன் மல்லியின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைப்பற்றப்பட்ட பணம் போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் தெரிவித்தார். 'ரன் மல்லி' என அழைக்கப்படும் சரித் சந்தகெலும், 'ஹரக் கட்டா'என அழைக்கப்படும் நதுன் சிந்தக்க என்பவரின் உதவியாளர் எனவும் இவர்கள் இருவரும் தற்போது துபாயில் வசிக்கின்றார்கள் என நம்பப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்