பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2021 | 6:43 pm

Colombo (News 1st) கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம், ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க குழுக்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு எதிராக இன்றும் பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியினரால் இன்று காலை கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் மாணவர் அமைப்புகளும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

களுத்துறையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

‘ஒடுக்குமுறைக்கு அடிபணிய மாட்டோம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் , ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து வெல்லவ நகரில் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்கவின் தலைமையில் இது இடம்பெற்றது.

வெல்லவ நகரிலிருந்து வெல்லவ சந்தை வரை பேரணி முன்னெடுக்கப்பட்டு, சந்தைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி ரிதிகம நகரில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.

ரிதிகம நகரில் ஆரம்பமான பேரணி, ரிதிகம பஸ் நிலையத்தை சென்றடைந்ததும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, வீரகெட்டிய நகரில் நகரிலும் ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களை முன்நிறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழைய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், தேசிய கலை இலக்கிய பேரவையினர், புதிய சிந்தனை பெண்கள் அமைப்பு உட்பட பொது அமைப்புகளும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று தலவாக்கலை பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த மற்றுமொரு போராட்டம் வலஸ்முல்ல நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்