இவ்வருடத்தில் அதிகளவில் தேயிலை உற்பத்தி 

இவ்வருடத்தில் அதிகளவில் தேயிலை உற்பத்தி 

by Staff Writer 16-07-2021 | 4:49 PM
Colombo (News 1st) இலங்கையில் அதிகளவு தேயிலை உற்பத்தி செய்த வருடமாக இந்த வருடம் அமையும் என பெருந்தோட்ட கைதொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 160 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களிலும் அதிக உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை வௌியிட்டுள்ள பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர், அதன் மூலம் நாட்டில் அதிக தேயிலை உற்பத்தி செய்யப்பட்ட வருடமாக 2021 ஆம் ஆண்டு அமையும் எனவும் தெரிவித்தார். அதிகளவு தேயிலை உற்பத்தி செய்யப்பட்ட வருடமாக இந்த வருடம் அமையும் என்றாலும், தேயிலை உற்பத்திக்கு பெரும் பங்காற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கின்றதா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. சம்பள நிர்ணய சபையினால் நாளாந்த சம்பளமாக 1000 ரூபா நிர்ணயிக்கப்பட்டாலும், அதற்காக ஆகக் குறைந்தது 18 கிலோகிராம் அல்லது 20 கிலோகிராம் தேயிலை பறிக்க வேண்டுமென பெருந்தோட்ட நிறுவனங்கள் நிபந்தனை விதித்துள்ளன. இந்நிலையில்,  தமக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவு கிடைப்பதில்லையென பல பெருந்தோட்டங்களை சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்வதாக இருந்தால், அது தொடர்பில் தொழிற்சங்கங்களும் பெருந்தோட்ட நிறுவனங்களும் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்து தமது கவனத்திற்கு கொண்டுவந்தால், அதனை செயற்படுத்துவது தொடர்பிலான அடுத்த கட்ட செயற்பாடுகளை எடுக்க முடியும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.