Selendiva தொடர்பான மனுவை செப்டம்பரில் பரிசீலிக்க தீர்மானம்

Selendiva தொடர்பான மனுவை செப்டம்பரில் பரிசீலிக்க தீர்மானம்

Selendiva தொடர்பான மனுவை செப்டம்பரில் பரிசீலிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2021 | 3:01 pm

Colombo (News 1st) Selendiva Investments, Selendiva Leisure Investments ஆகிய நிறுவனங்களுக்கு, அரசுக்கு சொந்தமான அல்லது அரச பங்குகளைக் கொண்ட நிறுவனங்களை விற்பனை செய்தல் அல்லது குத்தகைக்கு வழங்குதலை தடுப்பதற்கு, நிதி அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொழில்சார் பொறியியலாளரான கபில ரேணுக பெரேராவினால் இந்த மனு கடந்த 30 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

தமது மனுவில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தர்ஷன வேரதுவ முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்று, அதற்கான அனுமதியை வழங்கியது.

அரச சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதன் ஊடாக, இலங்கை அரசியலமைப்பு மற்றும் அரச நிதிக்கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும், இதனூடாக நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் எனவும் மனு ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை, அமைச்சரவையின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், Selendiva Leisure Investments நிறுவனம், Selendiva Investments நிறுவனம் மற்றும் 19 தனி நபர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்