by Staff Writer 15-07-2021 | 2:05 PM
Colombo (News 1st) விலைமனு கோரல் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட கெரவலப்பிட்டிய 350 மெகாவாட் LNG மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப்பணிகளை அமெரிக்காவின் New Fortress நிறுவனத்துடன் கூட்டுத் திட்டமாக முன்னெடுக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை மின்சார சபையின் உப நிறுவனமான Lanka Transformers நிறுவனத்துடன் லக்தனவி (LTL) நிறுவனம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக New Fortress நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
கெரவலப்பிட்டியவின் 350 மெகாவாட் இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு விலைமனு கோரியது.
குறித்த விலைமனு கோரலின் போது பல சர்ச்சைகள் எழுந்தன.
அமைச்சரவை நியமித்த நிதி ஒதுக்கீட்டுக் குழு, மேன்முறையீட்டு விசாரணைக் குழு ஆகியன அமைச்சரவைக்கு பல்வேறு யோசனைகளை முன்வைத்து இறுதியில் லக்தனவி நிறுவனத்திற்கு விலைமனு வழங்கப்பட்டது.
லக்தனவி நிறுவனம் அண்மையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்துடன் கூட்டுத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
லக்தனவி நிறுவனம் இலங்கை அரசுடன் இந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் 20 வருட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக New Fortress நிறுவனம் தெரிவித்துள்ளது.
300 மெகாவாட் கொள்ளளவை கொண்ட கெரவலப்பிட்டியவில் உள்ள யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கு தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான LNG எனப்படும் இயற்கை வாயுவை விநியோகிப்பதற்காக New Fortress அமெரிக்க நிறுவனம் தற்போது இலங்கை அரசுடன் அடிப்படை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின்படி கொழுப்பிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் LNG முனையம் அமைக்கப்படவுள்ளதுடன், அந்த முனையத்தில் இருந்து கெரவலப்பிட்டியவிற்கு குழாய் கட்டமைப்பொன்று அமைக்கப்படவுள்ளது.