MV X-Press Pearl இழப்பீட்டு தொகையில் 2 மில்லியன் டொலர்களை மீனவர்களுக்கு ஒதுக்குவதாக அறிவிப்பு

by Staff Writer 14-07-2021 | 7:52 PM
Colombo (News 1st) MV X-Press Pearl கப்பல் தீயினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கிடைக்கும் இழப்பீட்டில் 2 மில்லியன் டொலர்கள் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் என சமுத்திர சுற்றாடல் அதிகார சபை இன்று அறிவித்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனான பேச்சுவார்த்தையின் போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பிற்காக இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 40 மில்லியன் டொலர் கோரப்பட்டுள்ளது. கோரப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் 3.6 டொலர் தற்போதைக்கு கிடைத்துள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். எஞ்சிய தொகைக்கான ஆவணங்களை முன்வைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் பெறுபேற்று மீளாய்வுக்கு அமைய இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிரதான நகரங்கள் மற்றும் பிரதேச நகரங்களுக்கு இடையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்காக ஒரே தடவையில் நூறு நகரங்களுக்கு நகர வசதிகளை பெற்றுக்கொடுப்பதை ஜூலை மாத இறுதியில் ஆரம்பிப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபை தற்போது மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்காக 60,000 வீடுகளை நிர்மாணித்து வருகின்றது. தனியார் முதலீட்டாளர்களுடன் மேலும் 12,000 வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர, 25 மாவட்டங்களில் புதிதாக 28 நடைபாதைகளை நிர்மாணிப்பதாக இன்றைய பேச்சுவார்த்தையில் திட்டமிடப்பட்டுள்ளது.