அகதிகளுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்துவோம்

வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரில் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தப்படும்: அமைச்சர் K.S.மஸ்தான்

by Staff Writer 14-07-2021 | 5:35 PM
Colombo (News 1st) தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழகத்தின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் K.S.மஸ்தான் தெரிவித்துள்ளார். சுமார் 80,000-இற்கும் அதிகமான இலங்கை தமிழ் குடும்பங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வருவதாக அமைச்சர் K.S.மஸ்தான் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வருபவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் இருந்து வந்த தமிழ் மக்களுக்கு குடியுரிமை வாய்ப்பு தரப்படவில்லை என சிறுபான்மையின மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் K.S.மஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள 108 அகதி முகாம்களில் 106 முகாம்களில் இலங்கை தமிழர்கள் வாழ்வதாகவும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த சட்டபேரவைக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கத் தேவையான சட்டங்களும் திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழர்கள் முகாமை விட்டு வெளியே சென்று வீடு திரும்புவதற்கு உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் K.S.மஸ்தான் தெரிவித்துள்ளார். இதனிடையே, இலங்கையை சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்கிய விவகாரம் தொடர்பில் மூன்று பேருக்கு எதிராக இந்திய மத்திய புலனாய்வுத்துறையினர் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர். மதுரை கடவுச்சீட்டு அலுவலக மூத்த கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூவர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளதுனர். இலங்கையை சேர்ந்தவர்களுக்கு இந்திய பிரஜை என்ற அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டமை தொடர்பில் மூவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.