தனிமைப்படுத்தல் நிலையத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள துமிந்த நாகமுவ

by Staff Writer 14-07-2021 | 3:54 PM
Colombo (News 1st) கண்டி - பல்லேகலயில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள கட்டடமொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார். தமக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும், இதுவரை முடிவுகள் கிடைக்கவில்லை என தெரிவித்து அவர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார். காரணம் இன்றி தாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகையை ஏந்தியவாறு துமிந்த நாகமுவ எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான தொழில் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துமிந்த நாகமுவ உள்ளிட்ட தரப்பினர் திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 7 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். பிணை வழங்கப்பட்டதன் பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.