இன்றும் தொடரும் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

இன்றும் தொடரும் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

by Staff Writer 14-07-2021 | 8:21 AM
Colombo (News 1st) அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் Online கற்பித்தலில் செயற்பாடுகளில் இருந்து விலகி, முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் (14) தொடர்கின்றது. தமது கோரிக்கைக்கு கல்வி அமைச்சினால் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் (12) காலை 6 மணி முதல் இணையத்தள கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளனர். குறித்த சங்கத்தின் சில உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தால், பிணை வழங்கப்பட்ட போதிலும் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. தமது சம்பள வேறுபாட்டிற்கான தீர்வு காணப்படுவதுடன், அதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள தாம் தயாராகவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். எனினும், பேச்சுவார்த்தைக்கு அவகாசம் வழங்காது அரசாங்கம் தொடர்ந்தும் இதனை பிற்போடுமானால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க நேரிடுமென அவர் கூறியுள்ளார். இணையவழி கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தொடர்ச்சியாக இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதாக கல்வி தொழிற்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாமையானது, எதிர்கால சந்ததியினருக்கு இழைக்கப்படும் பாரிய குற்றமாகும் எனவும் உலப்பனே சுமங்கல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அமைதியாகவிருந்து தமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்த முனையுமாயின் இதனை விட பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கல்வி தொழிற்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய செய்திகள்