கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம், ஆர்ப்பாட்ட அடக்குமுறைக்கு எதிராக இன்றும் போராட்டம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம், ஆர்ப்பாட்ட அடக்குமுறைக்கு எதிராக இன்றும் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2021 | 9:02 pm

Colombo (News 1st) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தற்போது பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வது தொடர்பாக இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை.

இதனிடையே சமயத் தலைவர்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்க அமைப்புகள் பல ஒன்றிணைந்து இந்த சட்டமூலத்தை மீள பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.

அதற்காக கடந்த நாட்களில் நடத்தப்பட்ட எதிர்ப்புகளின் போது அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வரை போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதுடன், ஒன்றிணைந்து எழுப்பப்படும் சமூக எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் சில இன்றும் கொழும்பில் இடம்பெற்றன.

பெரும்பான்மை அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒன்றிணைந்த எதிர்ப்பு பேரணி கொழும்பு நகரில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

கொழும்பு தாமரைத் தடாகத்தை அண்மித்து இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பமானது.

அதன் பின்னர் லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக டீன்ஸ் வீதி, மருதானை சந்தியை அடைந்த வாகனப் பேரணி டெக்னிக்கல் சந்தி ஊடாக புறக்கோட்டைக்கு சென்று, அங்கிருந்து காலி முகத்திடலை அடைந்தது.

இந்த எதிர்ப்பு வாகனப் பேரணி கொழும்பு விஹார மகாதேவி பூங்காவின் முன்பாக நிறைவுக்கு வந்தது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சமூக செயற்பாட்டு அடக்குமுறையினை உடனடியாக நிறுத்துதல், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளல் மற்றும் தொழிற்சங்க பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடைபெறும் பகுதியில் பிரசன்னமாகியிருந்த பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் மாத்திரம் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதாக அங்கிருந்த நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, தொழிற்சங்க போராட்ட அடக்குமுறை மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக மற்றுமொரு எதிர்ப்பு வாகனப் பேரணி பேருவளை நகரில் இன்று ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டப் பேரணி பின்னர் களுத்துறை நகரையும் அதனை தொடர்ந்து பாணந்துறை நகரையும் சென்றடைந்தது.

இதேவேளை, உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாஸவிற்கு இடையில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (13) பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டது.

இலவசக் கல்வியை பாதுகாப்பது தமது கட்சியின் நிலையான கொள்கை எனவும் அதனை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்