திருமலையில் 3000 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டம்

3000 மில்லியன் டொலர் முதலீட்டில் திருமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க அமெரிக்கா முயற்சி

by Staff Writer 13-07-2021 | 6:24 PM
Colombo (News 1st) 3000 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு திட்டம் என கூறப்படும் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் நிர்மாணிப்பதற்கு அமெரிக்க நிறுவனமொன்று முயற்சிப்பதாக தேசிய சங்கங்கள் ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினூடாக அவர் இந்த விடயத்தை வௌிக்கொணர்ந்துள்ளார். நிர்மாணப் பணிகளூடாக கையளிக்கும் கொள்கையுடன் இந்த திட்டம் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயற்படுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் பகிரங்கமாக அழுத்தம் விடுக்கின்றமை இரகசியமான விடயமல்ல எனவும் டொக்டர் வசந்த பண்டார தனது அறிக்கையில் கூறியுள்ளார். அவ்வாறான அழுத்தங்கள் விடுக்கப்படுகின்ற போதிலும், முதலீட்டிற்கான பகிரங்க விலை மனு கோரலுக்கு அமைய, சர்வதேச விலை மனுக்களை கோரும் நிலைப்பாட்டில் துறைசார் அமைச்சர் உதய கம்மன்பில இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் அமைச்சரின் நிலைப்பாட்டை மாற்றுவதா அல்லது அமைச்சிலிருந்து அவரை விலக்குவதா என்ற இரண்டு முடிவுகளில் ஏதேனும் ஒரு முடிவை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என டொக்டர் வசந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.