குடு நோனியின் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

பொம்மைக்குள் போதைப்பொருள்: குடு நோனியின் கடத்தல் முறியடிப்பு

by Staff Writer 13-07-2021 | 4:58 PM
Colombo (News 1st) தபால் பொதி சேவை (courier service) ஊடாக போதைப்பொருள் கடத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன. கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். அநுராதபுரத்திலுள்ள ஒருவருக்கு பொம்மையொன்றுக்குள் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டு, அனுப்பப்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியிலுள்ள 49 வயதான 'குடு நோனி' என்ற பெண்ணினால் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் கடுவலை பகுதியிலுள்ள வீட்டிலிருந்து 56 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொதி சேவையூடாக அனுப்பப்பட்ட பொதியை அநுராதபுரத்தில் பெற்றுக்கொண்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், தடுப்புக் காவல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.