அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் அவதானம்

by Staff Writer 13-07-2021 | 8:06 PM
Colombo (News 1st) அரச மற்றும் பகுதியளவு அரச நிறுவனங்களின் ஊழியர்கள் நேர்மையாக முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை தயாரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று சட்ட வரைஞருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச மற்றும் பகுதியளவு அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பில் அலரி மாளிகையில் இன்று முற்பகல் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித்த ராஜபக்‌ஸ, நீதி அமைச்சின் செயலாளர், சட்ட வரைஞர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். நல்லாட்சி அரசாங்கத்தினால் சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அரச ஊழியர்களுக்கு எதிர்நோக்க நேரிட்ட பிரச்சினைகள் தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே இதன்போது விளக்கமளித்துள்ளார். அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்ட அரச மற்றும் பகுதியளவு அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிவாரணமளிப்பதன் நோக்கம் குறித்து பிரதமரின் செயலாளர் இதன்போது தௌிவுபடுத்தியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சட்ட வரைவுகளை தயாரிப்பதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் உள்ளிட்ட குழு நியமிக்கப்பட்டு பரிந்துரைகளை ஒரு மாத காலப்பகுதிக்குள் வழங்குமாறு பிரதமர் இன்று பணிப்புரை விடுத்துள்ளார். அதிகாரிகளுக்கான சட்ட கட்டமைப்பிற்கு அப்பால் நேர்மையுடன் கடமைகளைச் செய்ய அனுமதிக்கக்கூடிய வரம்புகளை அடையாளம் கண்டு, தேவையான ஏற்பாடுகளை செய்ய நிறுவனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. இதற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட வரைவொன்று அமைச்சரவை பத்திரமாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.