துமிந்த நாகமுவவை விடுவிக்குமாறு கோரி அவரது மனைவி மனு தாக்கல்

by Staff Writer 12-07-2021 | 7:27 PM
Colombo (News 1st) முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவின் மனைவியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் உத்தரவிடுமாறு கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டிருந்த தனது கணவர் உள்ளிட்ட 08 பேர், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கொம்பனித்தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக மனுதாரரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வௌியிடப்பட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பயன்படுத்தி, தனது கணவர் உள்ளிட்ட 06 பேர் பல்லேகலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மனுதாரரான துலானி பிரியங்கிகா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன்போது நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் தனது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக துலானி பிரியங்கிகா தெரிவித்துள்ளார். மனுவில் பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி, பல்லேகல தனிமைப்படுத்தல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்