சுபீட்சத்தின் நோக்கை யதார்த்தமாக்குவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவிப்பு

by Staff Writer 12-07-2021 | 6:55 PM
Colombo (News 1st) அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவமளித்து சுபீட்சத்தின் நோக்கை யதார்த்தமாக்குவதாக புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்தபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். நிதி அமைச்சரின் பதவியேற்பை அடுத்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களின் சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று (11) நடைபெற்றது. 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார சவால்களை வெற்றி கொண்டதைப் போன்றே, இம் முறையும் பொருளாதார சவால்களை அமைச்சர் பசில் ராஜபக்ஸ நிச்சயமாக வெற்றி கொள்வாரென இந்த சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 2006, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் யுத்தம் இடம்பெற்றபோது நாட்டின் வௌிநாட்டு நாணய இருப்பு 1.2 பில்லியன் டொலரை விட குறைந்த நிலையிலிருந்த கிராமிய பொருளாதாரத்தை பசில் ராஜபக்ஸ மேம்படுத்தியதாக அவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவமளித்து சுபீட்சத்தின் நோக்கை யதார்த்தமாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதை தமது முக்கிய பொறுப்பாக கருதி செயற்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பொறுப்புகள் மாத்திரமல்லாது கட்சிக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளையும் தயக்கமின்றி நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்பு செய்வதாக அமைச்சர் கூறியுள்ளார். இதற்காக அனைவரது ஒத்துழைப்பையும் தாம் எதிர்பார்ப்பதாகவும் பசில் ராஜபக்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏனைய செய்திகள்